• 10.24.2012

  மாற்றானும் கே.வி.ஆனந்தின் குழப்பமும்

     மாற்றான் பல விமர்சனங்களை இணையத்தில் பெற்று மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சியைத் திறந்தால்,அனைத்து சேனல்களிலும் சூர்யா நம் கண் முன் வந்து மாற்றானில் தானும் மாற்றான் குழுவும் சந்தித்த சவால்களை சொல்கிறார்கள்.
         இதைப் பார்த்த என் வீட்டிலும் இயக்குனர், நடிகர்,நடிகைகள் மற்றும் அந்த குழுவே மிகவும் உழைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆம் எல்லோருமே நன்றாகத் தான் உழைத்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையில் அந்த உழைப்பு மிகவும் அரிதாக இருப்பதை நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். அதற்கு காரணங்களும் சொல்லிவிட்டார்கள்.
       இது எல்லாம் இந்த படம் வெளியானப் பிறகு வந்த செய்தி. ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பெரும்பாலான உதவி இயக்குனர்கள் இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றிப் பெறாது என்று சொன்னார்கள். சரியாக ஏப்ரல், மே மாத வாக்கில் வந்த அந்த செய்தி தான் அதற்கு காரணமாக அமைந்தது.
             கே.வி.ஆனந்த மாற்றான் படப்பிடிப்பில் ஒரு உதவி இயக்குனரை செருப்பை எடுத்துக் கொண்டு துரத்தி துரத்தி அடித்தார் என்பது தான் அந்த செய்தி. இந்த செய்தி எந்தளவு உண்மை என்றுத் தெரியவில்லை. ஆனால் இதை கேள்விப்பட்ட என்னுடன் பணிச் செய்துக் கொண்டிருந்த உதவி இயக்குனர்கள் உடனே சொன்ன வார்த்தை, படம் ஓடாது. இங்கே அவர்கள் உணர்ச்சிவசப்பட்டது நியாயமா..? இல்லையா…? என்று எனக்குத் தெரியவில்லை.
             ஆனால் திரைப்படம் வெளியாகி முதல் நாள் அந்தப் படத்தை நான் பார்க்கையில், அவர்கள் சொன்னது எத்தனை உண்மை என்பது எனக்குப் புரிந்தது. எல்லா மனிதனுக்கும் கோபம் பொது தான் ஆனால் ஒரு உதவியாளரின் மேல் தன் கோபத்தை காட்டுவதில் இத்தனை நாகரிகமற்ற செயலை கே.வி.ஆனந்திடமிருந்து யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
         இதற்கெல்லாம் காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான். அது உங்களுக்கு படத்தைப் பார்க்கும் பொழுதே தெரியும். ஒரு மிகப் பெரிய படம் கிடைத்துவிட்டது என்றதும், திரைக்கதையைப் பற்றிக் கவலைப்படாமல் சென்றால், இப்படித் தான் படப்பிடிப்பிம் நிகழும். இது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல தன் கோபத்தை, எதிர்ப்பைக் காட்ட முடியாதவர்கள் மேல் கொட்டும் அனைத்து மனிதர்களுக்கும் நிகழும் சறுக்கல்.

  நட்புடன் 
  தமிழ்ராஜா