• 10.17.2012

  பேராசையும் பெரியப் படங்களின் வீழ்ச்சியும்
         2012 ஆம் ஆண்டு திரைத்துறையில் பெரிய சலனத்தை ஏற்படுத்திய ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். பல கோடி சம்பளத்தை ஸ்டார்களுக்கு கொட்டிக் கொடுத்து, பல கோடிகளில் படங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நிகழ்ந்த வண்ணமிருப்பது அனைவரும் அறிந்ததே…
         இந்த முறையில் ஸடார்களின் படங்கள் வெளிவரும் நேரத்தில் கணிசமான திரையரங்குகளை கைக்குள் வைத்துக் கொண்டு, ஓரே நேரத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டு லாபம் சம்பாதித்துவிடலாம்.  இதுவே பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் கனவு. எனவே ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கின்றனர்.
         எனவே அவர்களும் மக்களை ஒரு வாரத்திற்குள் எப்படியும் ஏமாற்றி திரையரங்கிற்குள் வரும் முயற்சியையே எடுக்கின்றனர்.இதற்கு காரணம், ஒரு வாரத்தில் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற  குறுகிய எண்ணமே
         இந்த முறை எப்பொழுது தமிழகத்திற்குள் வந்ததோ தெரியவில்லை, அன்றிலிருந்து பெரிய படங்களின் தரம் மிகவும் குறைந்து கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி அது எந்த வகையிலும் மக்களை கவரவில்லை என்பது இந்த வருடம் வெளியான அனைத்து பெரிய படங்களின் தோல்வியிலும் தெரிகிறது. காரணம் மாதங்கள் ஓடிய படங்களை, வாரத்திற்குள் சுருக்கியது மக்களல்ல… திருட்டு டி.வி.டியும் அல்ல. படத்தின் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் ,தியேட்டர் உரிமையாளர்களுமே காரணம்.
         குறுகிய காலத்தில், போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையே அதன் பின்னணிக்குக் காரணம். கடந்த வருடங்களில் தமிழக்த்தின் நிலை எல்லோரும் அறிந்ததே, தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாகுறை,விலைவாசி உயர்வு என்று மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். விவசாயத்தில் இருந்து சிறு தொழில் வரை அனைத்துத் தொழிலும் பாதிக்கப்பட்டு பலர் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
         அவர்களின் நிலையறியாமல் வெறும் குறுகிய வியாபார நோக்கத்துடன் மட்டுமே திரைப்படங்களை எடுத்தால் மக்கள் எப்படிப் பார்ப்பார்கள். இதில் தமிழக மக்களுக்கு ரசனை இல்லை என்ற குறைகளை வேறு சொல்கின்றனர். தமிழ்நாட்டில் திருட்டு டி.வி.டி பெருகிவிட்டது என்று வேறு சாக்கு.
         இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து வெளி வந்த மிகப் பெரிய நடிகர்கள் நடித்த மிகப் பிரம்மாண்டமான படங்கள்
  சகுனி -   கார்த்தி
  பில்லா-2 – அஜித்
  முகமூடி – ஜீவா
  தாண்டவம் – விக்ரம்
  மாற்றான் – சூர்யா
         இதெல்லாம் இந்த வருடம் வெளியான மிகப் பெரிய படங்கள். இந்தப் படத்தை எடுத்ததற்குரிய செலவும், அதில் நடித்த கதாநாயகர்களுக்கு சம்பளமாய் கொடுத்த தொகையும் நிச்சயம் பல கோடிகளை எட்டும். இருப்பினும் இது வசூலில் வெற்றி பெற்ற படங்கள் என்று பல விளம்பரங்கள் வெளிவந்தாலும். மக்களின் ஏகோபித்த வரவேற்பை இழந்தப் படங்கள். மக்களின் ரசனைக்கு சற்றும் ஒத்து வராத இந்தப் படங்கள் வசூல் சாதனை செய்திருக்கிறது என்றால் நம்பத் தான் முடியவில்லை.
        இதுவே மக்களுக்கு தமிழ்ப் படங்கள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. அது மட்டுமின்றி பெரியப் படங்கள் அப்ப்டியென்றால், ரியல் எஸ்டேட் மற்றும் பலத் தொழில்கள் செய்தவர்களும் திரைத்துறையைப் பற்றித் தெரியாமல் திரையுலகத்திற்குள் நுழைந்து, சிறிய தயாரிப்பு படங்களையும் ஆக்ரமித்து, சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் மேலும் ஒரு வெறுப்பை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டனர்.
         தமிழகத்தில் எடுக்கப்படும் பல திரைப்படங்கள் வெளிவராமல் பெட்டிக்குள்ளேயே தூங்கும் அவலம் இதனால் தான் நிகழ்கிறது.
         பெரிய தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் ஒரு குறிப்பிட்ட சூத்திரத்திற்குள் படங்களை அடக்கிவிடுகின்றனர். சின்ன தயாரிப்பாளர்கள்,இயக்குனர்களோ போதிய வசதி வாய்ப்பு இல்லாததால் கதையின் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.
         இந்த நிலை மாற வேண்டுமெனில் பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் சிறியப் படங்களை தயாரிக்க முன் வர வேண்டும். ஒரு பெரிய படம் என்றால், அடுத்து ஒரு சிறியப் படத்தை தயாரிக்கலாம்.
        ஏனெனில் இந்த வருடத்தில் மக்களின் வரவேற்பைப் பெற்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களே…
                     ஓகேஓகே,கலகலப்பு,அட்டக்கத்தி,நான்,சுந்தரப்பாண்டியன்,சாட்டை என்ற வரிசை மக்களின் வரவேற்பை ஒருங்கே பெற்ற படங்கள். இதில் நடித்தவர்களெல்லாம் பெரிய ஹீரேக்களெல்லாம் இல்லை. ஆனால் ஓரளவு மக்களுக்கு பரிச்சயமானவர்கள்.
         மக்கள் தரமான படங்களுக்கு அங்கீகாரம் அளிப்பர் எனபதற்கு சிறந்த உதாரணம் நான் ஈ.
         சமீபத்தில் வெளியான சாட்டைத் திரைப்படத்திற்கு 10 ரூபாய்க்கு ஒரு திரையரங்கு டிக்கெட் கொடுத்ததால் அந்த தியேட்டரரில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக என் நண்பன் சொன்னான். அநேகமாக அது கள்ளக்குறிச்சிப் பக்கம் என்று நினைக்கிறேன்.
       அதற்காக 10 ரூபாய்க்கு டிக்கெட் விற்க வேண்டும் என்று சொல்லவில்லை. மக்களின் இன்றைய பொருளாதார சிக்கலை மனதில் வைத்து குடும்பத்துடன் அவர்கள் திரையரங்கிற்குள் வருவதற்கு என்ன வழி என்று யோசித்தால் திரைத்துறையினர் மட்டுமின்றி, திரைத்துறையை சார்ந்த அனைவரும் நன்மை பெறுவர். மக்களுக்கும் தரமான திரைப்படங்கள் சென்று சேரும்.
         இது நிகழ்ந்தால் தமிழ்த்திரைப்படங்கள் நல்ல கலைவடிவமாக மாறி உலக அரங்கில் தமிழகமும் தலை நிமிர்ந்து நிற்கும்.அது நம் வாழ்க்கை கலாச்சாரத்தையும் சீர்த்தூக்கி நிறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


  நட்புடன் 
  தமிழ்ராஜா