• 8.01.2012

  சரவணன் மீனாட்சி திருமணம் ஒரு சமூகப் பார்வை:

   

       சென்ற வார இறுதியில் என் வீட்டு தொலைக்காட்சியின் ரிமோட் என் சகோதிரியின் கையில் சிக்கிக் கொண்டது. எவ்வளவுக் கேட்டும் கிடைக்கவில்லை. சரி மெகாத் தொடர் தானே அரை மணி  நேரத்தில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் காத்திருந்தேன். நேரமாகத் தான் தெரிகிறது, அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் சரவணன் மீனாட்சியில் இருவருக்கும் திருமணமாம்.எனவே 8:30 லிருந்து 10:30 வரை 2 மணி நேரம் அந்த தொடர் ஒளிப்பரப்பாகும் என்ற தகவல் தாமதமாகவே தெரிந்தது.
       மேலும் தொலைக்காட்சி முன் அமர எனக்கு விருப்பமில்லாமல் எழுந்து சென்றுவிட்டேன். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அந்தத் தொடர் இளைஞர்களை பேராதரவை பெற்றது எனபதை அப்பொழுது தான் கேள்விப்பட்டேன். சரி அப்படியெனில் நானும் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். சரியாக 10:20க்கு வந்து மறுபடியும் அமர்ந்தேன்.  இறுதிக் காட்சியையாவது பார்ப்போம் என்றெண்ணி அமர்ந்தேன். நான் அமர்ந்த நேரம் மின்சாரத்திற்கு பிடிக்கவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு சில மணித்துளிகளில் வந்துவிட்டது. ஆனால் அதற்குள் சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்துவிட்டது. என் சகோதரியின் முகத்தில் பார்க்க முடியாமல் போன வருத்தம் வெளிப்படையாகத் தெரிந்தது.
       ஆனால் அந்த தொடர் மீண்டும் ஒளிப்பரப்பாகும் என்று அடுத்த தினத்திலேயே தெரிந்தது. தொலைக்காட்சிகள் எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்றேத் தெரியவில்லை. அப்பொழுதும் சரியாக கடைசி நிமிடங்களில் தான் பார்த்தேன்.
       மீனாட்சிக் கழுத்தில் வேறொருவன் (அருணாச்சலம்) தாலிக் கட்டப் போகிறான். தாலியுடன் மீனாட்சியைப் பார்க்கிறான். காட்சி மாறுகிறது. மீனாட்சியிடம் மாப்பிளை அருணாச்சலம் தனியாகப் பேசுகிறான். இந்த இடத்தில் அவன் சொல்லும் ஒரு வார்த்தை இன்றைய சமூகம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். மீனாட்சியிடம் தூரத்தில் இருந்து பார்த்த எனக்கே உன்னோட காதல் புரியுது. உருகி உருகி காதலிச்ச உனக்கு ஏன் புரியல மீனாட்சி என்று அருணாசலம் சொல்வது போல் அமையும் காட்சி இன்றைய இளைய சமூகத்தின் காதலை அப்படியே பிரதிபலிப்பதாகவே நான் பார்க்கிறேன்.
       ஆமாம் இன்று நிறைய காதல்கள் இப்படித் தான் சக்தியற்று பிறர் வந்து அதற்கு சக்திக் கொடுப்பது போல் இருக்கிறது. காதல் நிகழும் இருவருக்கிடையே நிகழும் பிரச்சினையை விளம்பரப்படுத்தி பரைச்சாற்றி ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் ஒரு சான்றாகவே அந்த காட்சி முன் நிற்கிறது
       அதன் பிறகு மீனாட்சி சரவணனை அழைத்து வர செல்கிறாள். மாளிகைப் போன்ற ஒரு பின்புலத்தில் ஒரு இருக்கையில் மனித நடமாட்டமில்லாத  இடத்தில் சரவணனுடன் அமர்ந்து அவள் பேசும் வார்த்தைகள் அழகு.
       அந்த வார்த்தைகள் காதலிக்கும்  ஒவ்வொரு  பெண்ணும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டியவை.
       சரவணன் ஒவ்வொரு முறையும் தவறுகள் செய்துக் கொண்டே இருக்கிறான். எந்த காரியத்தையும் சொதப்பிக் கொண்டே வந்திருக்கிறான். இருப்பினும் அது தானே நான் காதலித்த சரவணன் என்று மீனாட்சி சொல்வது எத்தனை எதார்த்தம். காதலிக்கும் பொழுது பார்த்த குணங்களை திருமணத்தின் பொழுது சட்டென மாற்றிக் கொள்ளச் சொல்லும் பெண்கள் மத்தியில் மீனாட்சியின் முடிவு அவளின் அழுத்தமான காதலைப் பிரதிபலிக்கிறது.
       இருப்பினும் இந்த சரவணன் போல் ஆண்கள் எப்படி இருக்கக் கூடாது என்றும் இந்த முடிவு சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.
       காதல் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் அந்த எதார்த்தம் இன்று நிறையப் பேர்களிடம் மறைந்துக் கொண்டு வருகிறது. இல்லையேல் சிம்மை மாற்றுவதைப் போல காதலிகளையும், காதலர்களையும் சரிவிகிதமாக ஆணும் பெண்ணும் போட்டிப் போட்டுக் கொண்டு மாற்றுவது எதைக் காட்டுகிறது.
       ஒருவரை காதலிக்கும் பொழுது எப்படி பார்க்கிறோமோ இறுதி வரை நம் மனம் அப்படியே அவரைப் பார்ப்பது தான் நல்ல வாழ்க்கைகான அடித்தளமாக அமையும்.
       அந்த அடித்தளம் சரவணன் மீனாட்சியில் நிகழ்ந்தது. தொலைக்காட்சித் தொடர் தாண்டி எதார்த்த வாழ்க்கையிலும் நிகழ்ந்தால் நம் சமூகம் மென்மேலும் வளர்ச்சியடையும்.

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே