10.25.2011

அவதாருக்கு கைத்தட்டல் கூடங்குளத்திற்கு ஏன் எதிர்ப்பு...?


அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை (தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த மனிதர்களுக்கும் இடையில் மிகப் பெரிய யுத்தம் நிகழ்கிறது. அதற்கு மனிதனில் இருந்து ஒருவன் இவர்களுக்கு நாபியாகி உதவுகிறான். இறுதியில் நாபிகள் வெற்றி பெற்று மனிதர்கள் தோற்று, அந்த கிரகத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள்.

     இந்த படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றது.இயற்கையை அழிக்கும் மனிதர்களை ,நாபிகள் எதிர்க்கும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் மிகுதியாக காணப்பட்டது. உலகம் முழுவதும் இயற்கையைப் பாதுக்காக்கப் போராடும் பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூட இதை உதாரணமாகச் சொல்லலாம். இருப்பினும் மக்கள் இதனை எப்படிப் பார்த்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. பெருவாரியான மக்கள் இதை ஒரு சிறந்த பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவே பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினர் காலங்காலமாக இப்படிப்பட்ட போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராக நடத்திக் கொண்டுத் தான் இருக்கிறார்கள். இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் போராடிய எந்தப் போராட்டமும் இது வரை வெற்றிப் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் அவர்களின் போதிய கல்வியறிவின்மையாகக் கூட இருக்கலாம். அது மட்டுமின்றி  இயற்கையோடு வாழும் அவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய நவ நாகரிக மனிதர்களாகிய நாம் புரிந்துக் கொள்ளாததே முக்கியக் காரணம்.
     பல தொழிற்சாலைகளும்,ரயில் நிலையங்களும்,அடுக்கு மாடிக்கட்டிடங்களும், இன்னும் சில வளர்ச்சிகளும், அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தே உலகமெங்கும் உருவாகியிருக்கிறது. இதில் என்ன சோகமென்றால் அவர்கள் போராடுவது, நம்முடைய இயற்கையை ஒட்டிய வாழ்விற்கும் சேர்த்துத் தான் என்பதை நாம் புரிந்துக் கொள்வதில்லை. நம் இந்திய நாட்டில் மட்டும் இப்படி எத்தனைப் பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்தில் இருந்து விரட்டிவிட்டு நாம் வளர்ந்திருக்கிறோம் தெரியுமா?
இது இயற்கையை நோக்கி நாம் செய்யும் பாவச்செயல் அல்லவா...? 
மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தானே என்பதை அடிக்கடி நினைவூட்டும் இப்படிப்பட்ட மக்களை எளிமையாக ஒரே வரியில் ஓதுக்கி விடுகிறோம் “ அறியாமையால் செய்கிறார்கள்நாட்டின் வளர்ச்சிப் பற்றி சிந்திக்கத் தெரியாதவர்கள். உண்மையில் இது அவர்களின் அறியாமையா? நம்முடைய அறியாமையா?
   விஞ்ஞானம் என்றப் பெயரால் உலோகக் குப்பைகள் நிறைந்தக் காடாகத் தான் ஆகிவருகிறது இந்தப் பூமி. இன்றைய உலகத்தின் ஒட்டும் மொத்த மக்களும் விஞ்ஞானத்தின் குறிப்பிட்ட வளர்ச்சியால் உருவாகும் இயந்திரங்களை உபயோகப்படுத்தும் சோதனை எலிகளாகத் தான் உருவாக்கப் படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையே அப்படித் தானிருக்கிறது. 

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் இந்த விஞ்ஞான சமூகத்தால் ஒதுக்கப்படுகிறார்கள். கூடங்குலம் மக்கள் போராட்டம் இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். மக்கள் அங்குப் போராடிக் கொண்டிருக்க, அணு உலை எதிர்ப்பாளர்கள் என்று அவர்களுக்கு முத்திரைக் குத்துவது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. இயற்கைப் போராளிகள் என்று அவர்களை அழைப்பது தான் சாலச் சிறந்தது.
     ஆம், அவர்கள் அணு எதிர்பாளர்கள் அல்ல... இயற்கையைப் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள். மனிதன் தன் சர்வாதிகாரத்தால், பல உயிரின்ங்களின் வாழ்வாதாரங்களை, இருப்பிடங்களை அழித்துவிட்டான். அதற்கெல்லாம் பாவம் வாயில்லை, எனவே அதெல்லாம் போராட்டம் செய்யவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் யானைகளெல்லாம் அடிக்கடி மனித குடியிருப்புக்குள் புகுந்து நாசம் செய்வது தான். இப்படி பல உயிரினங்களின் வாழ்வாதாரங்களையெல்லாம் அழித்துக் கொண்டிருந்த மனிதன், இறுதியில் தன் இனமான சகமனிதனின் வாழ்வாதாரங்களிலேயே, கைவைத்துவிட்டது தான் மிகப் பெரிய கேவலம்.
     சக மனிதனின் துயரத்தைப் பற்றி கவலைப்படாத இன்றைய நவ நாகரிக மனிதர்கள் இயற்கையைப் பற்றி எப்படிக் கவலைப்படுவார்கள். தங்களின் மின் விசிறியும், குளிர்சாதனப் பெட்டியும்,கணினியும் இயங்காதது தான் இவர்களுக்குப் பெரியக் கவலையாக இருக்கும். நாளையத் தலைமுறை இயங்குவதே கேள்விக்குறியாக இருக்கும் இந்த அணு உலையைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை.
ஆப்பிள்  நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த்தற்கு தமிழகத்தின் பல இளைஞர்கள்  தங்கள் ஆழ்ந்த இரங்கலைப் ஃபேஸ் புக்கில் பதித்திருந்தார்கள். உலகம் முழுவதிலுமிருந்தும் பல இரங்கல் செய்திகள். அந்த மாமனிதரை கொண்டு சென்ற அந்தப் புற்று நோயைப் பற்றி சிந்திக்க எவருக்கும் நேரமில்லை.
     ஆனால் இதை கூடங்குலம் மக்கள் முன்னமே சிந்தித்து சொன்னால் முட்டாள்தனம் என்று அதே ஃபஸ் புக்கில் சிலர் பதிக்கிறார்கள். ஒருத்தருக்கு இத்தனை இரங்கல் செய்தி வருவது பாராட்டுக்குரியது தான். இருப்பினும் நாளை இந்த எண்ணிக்கை அணு உலையினால் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அணு உலையின் பாதிப்பினால் எத்தனை மனிதர்கள் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.
     வீண் பயம் என்று இதனை பலர் நினைக்கலாம். வரும் முன் காப்பது தான் நம்முடைய கலாச்சாரம். இது வரை பழங்குடிகள் மட்டுமே கையில் எடுத்தப் போராட்டத்தை அரசாங்கத்தை எதிர்த்து ஒரு குறிப்பிட்ட படித்த மக்கள் எழுப்பியிருக்கிறார்கள். இது தமிழகத்திற்கு மட்டுமின்றி எல்லா நாடுகளுக்கும் தேவையான ஒரு போராட்டமாகும்.
     நாட்டின் வளர்ச்சி என்று பேசும் இந்த சூழல் தான் இந்தப் போராட்டத்திற்கான சரியான கால கட்டம். அரசாங்கம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய மக்களும் மின்சாரத்தின் தேவையை உணரும் காலகட்டம் இது. மின்சாரத்திற்கான மாற்று வழியை நோக்கி மக்களும் அரசாங்கமும் சிந்திப்பதற்கான சரியான காலகட்டமும் இது தான். இந்த எல்லாவற்றுக்கும் கூடங்குலம் மக்கள் போராட்டம் வழி செய்யும் வகையில் அமைய வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தில் கூடங்குல மக்களுக்கு கைத்தட்டல் கிடைக்குமா? இல்லை இதையும் இன்றைய சில நவ நாகரிக மனிதர்கள் திரைப்படமாக எடுத்தால் தான் புரிந்து கொள்வார்களா?

4 comments:

  1. பருக்கு வணக்கம் ,,

    தங்களின் கட்டுரையை நான் வாசித்தேன் . அழகாக எழுதி உள்ளீர்கள் .

    நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும். அப்படிஎனில் நாம் அணுமின் நிலைகளை நிறுவ வேண்டும் .. ஆச்சரியமாக இருக்கிறதா ...? ஆம் .. அது தான் உண்மை . அணுமின் நிலயங்கள Global Warming என்ற உலக வெப்பமயமாதலுக்கு உதவும் CO2 வை வெளியேற்றாது. அப்படியானால் நாம் இயற்கையை பாதிக்கும் CO2 வை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் , நமது வாகனங்கள் , தொழிற்சாலைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் .

    Chloro Fluro Carbon என்ற ஒரு வாயுவை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் . இவை நேரடியாக ஓசோன் மணடலத்தை பாதிக்கும் . ஆனால் அணுமின் நில்யனகள் இந்த வாயுக்களை வெளியிடுவதில்லை . எனவே இந்த வாயுக்களை வெளியிடும் குளிர்சாதன பெட்டிகள் , Air Conditioners ( கார் மற்றும் வீடுகளில் ) இவற்றை முற்றிலுமாக தடுக்க வேண்டும் .

    மனிதகுலம் கதிர்வீச்சை 1 சதவீதம் அணுமின் நிலையங்களில் இருந்து பெறும் . ஆனால் 15 சதவீத கதிர்வீச்சை மருத்துவமனைகளில் இருந்து பெறுகிறோம் . எனவே மருத்துவமனைகளை நாம் அனுமதிக்க கூடாது. 81 சதவீதம் இயற்க்கை நமக்கு கதிர்வீச்சை கொடுக்கிறது . ஆம் அதனால் நாம் concrete வீடுகளில் வசிப்பதை தடை செய்து குடிசைகளில் வாழவேண்டும் . என் எனில் Concrete ல் கதிர்வீச்சு உண்டாம் . சூரியனில் இருந்து வெளியிடப்படும் காஸ்மிக் கதிர்கள் பெறும் கேடு விளைவிப்பவை . அதனால் சூரிய வெளிச்சம் விழும் இந்த இடத்திலும் நாம் நடக்ககூடாது . கடற்கரையில் நாம் காற்று வாங்கவே போக கூடாது என் எனில் கடலிலும் Radiation இருக்கிறதாம் . கடல் மண்ணிலும் Radiation உள்ளது . ஜாப்ஸ் மற்றும் நமது அமைச்சர் திரு கருப்பசாமி அவர்களும் புற்று நோயால் இறந்து உளார்கள் . அவர்கள் எந்த அணுமின் நிலையத்தின் அருகிலும் வாழவில்லை . இந்த கட்டுரையை கொஞ்சம் வாசித்து பாருங்கள் http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_18.html .

    எல்லாவற்றியும் விட நாம் எல்லாம் ப்ளாக் எழுதுகிறோமே , கம்ப்யூட்டர் அது கூட Radiation வெளியிடுகிறதாம் .. அட நம்ம மொபைல் போன் , மொபைல் டவர் கடுமையான radiation .

    ஆமாம் நண்பரே ... இப்படி பல காரியங்கள் நம்மை சூழ இருக்கிறது. அதனால்தான் பாதுகாப்பான அணுமின் நிலையங்கள் நமக்கு அவசியம். இதை நாம் புரிந்து கொள்ளவேண்டியது தான் . மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் போராடுகிறார்கள் . அவர்களின் அச்சத்தை போக்கி அப்படி அல்ல என்று விளக்கவேண்டியது அரசின் கடமை மாதிரம்மல்ல நமது கடமையும் தான் ...

    நன்றி

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி இருதயம்...
    உண்மையில் கதிர் வீச்சை இத்தனை இடங்களில் இருந்து பெறுகிறோம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் எழுதியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதில் நிறைய விசயங்களை நாம் தவிர்க்க முடியும், இயற்கையை ஓரளவாவது நாம் பாதுகாக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். நான் உங்களை ஆதிக் காலத்திற்கு கொண்டு செல்வதாக நினைத்துவிட்டீர்களா? புற்று நோய் உருவாக அணு உலையும் ஒரு காரணம் தான். புற்று நோயைப் பற்றி யோசித்தாலே நீங்கள் சொல்லியதையெல்லாம் ஒரளவு நாம் தவிர்க்கலாம்.
    எல்லாவற்றையும் விட நான் கேட்கும் கேள்வி அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வீர்கள்...? எந்த வளர்ந்த நாடுகளிலும் இதற்கான நிலையான திட்டமில்லை. உலகில் அதிகமாக அணு மின் சக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் நாடு ஃப்ரான்ஸ் என்று நினைக்கிறேன். அந்த நாடு தற்போது அணு உலையின் கழிவுகளை எங்குப் புதைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறது. உங்களின் வலைப்பூவிற்கு சென்று எல்லாவற்றையும் படித்தேன். உண்மையில் அருமையாக இருந்தது உங்களின் பதிவு. அணு மின் உற்பத்தியினால் உண்டாகும் கழிவுகளை எப்படி சரி செய்வது என்று உலக நாடுகள் இன்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தானிருக்கிறது. அப்படியிருக்க நாம் வேறு மாற்று வழியை யோசித்தால் என்ன என்பது தான் என்னுடைய கேள்வி...

    நீங்களே உங்கள் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவு தான் இது

    சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அனைத்து நாடுகளும் யோசிக்க தான் செய்கிறது . ஏன் எனில் , இதில் தயாரிக்கப்படும் மின்சாரம் பசுமையானது . இதற்க்கு எந்த மூலப் பொருளும் தேவை இல்லை. மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு தேவையான மின் கம்பங்கள் இல்லாத போது அந்த வீடுகளுக்கு சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் அற்புதமானது.

    ஆனால் சில பிரதிகூலங்களும் உள்ளன. இதனை நிறுவுவதற்கு ஆகும் செலவு அதிகம். உலகின் மாசு காரணமாகவும் சூரியன் இல்லாத தருணங்களிலும் மின்சார உற்பத்தி குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுகிற அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை. இந்தியாயவின் பெரிய சோலார் மின் உற்பத்தி 40 Mwe ( Adani Bitta Solar Plant,குஜராத் ) என்பது ஆச்சரியம் தானே.

    ஆச்சர்யமில்லை எதுவும் ... உண்மையில் நம்மால் முடியாததா...?
    ஏன் சூர்யனின் வெப்பத்தை நம்மால் சிறந்த முறையில் பயன்படுத்த முடியாதா? செலவு ஆகும் என்று சொல்வது வீண் பேச்சு. எந்த ஒரு தொழில் நுட்பமும் ஆரம்ப காலக் கட்டத்தில் அதிக செலவையே தரும். பழகத்தில் வந்துவிட்டால் மலிவாகிவிடும். மற்ற நாடுகளில் வேண்டுமானால் அதற்கு சாத்தியமில்லாமல் போகலாம். இந்தியாவில் நிச்சயம் சாத்தியம். முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் கான்கீரிட் ,அடுக்குமாடி, மொபைல்,தொலைக்காட்சியென்று சில மனிதர்களுக்கு மட்டுமே நான் பேசவில்லை. மின்சாரம் கூட இல்லாத எத்தனையோ கிராமங்கள் நம் இந்திய மண்ணில் இன்றும் இருக்கிறது.
    மனிதர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த உயிரின்ங்களுக்காகவும் பேசுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட மக்கள் அல்லாத மக்களும் இந்த உலகில் வாழ்கிறார்கள் நண்பரே...



    ஊரெல்லாம் குற்றங்கள் பெருகியிருக்க ... இந்த குற்றம் ஒன்றும் பெரியது இல்லை என்பது போல் தானிருக்கிறது நீங்கள் சொல்வது.
    உண்மையில் உங்களின் இந்த அணு பிளவினை நோக்கிய அறிவுத்திறனை, சூர்யக்கதிர்களை நோக்கி திருப்பினீர்கள் என்றால் உண்மையில் நல்லத் தீர்வு கிடைக்கும். தவறாக இருப்பின் மன்னிக்கவும்
    ஏனெனில் இன்னும் 1000 வருடம் கழித்து ஒரு அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால் கூட நீங்கள் சொன்ன அத்தனை பாதிப்புகளை மீறியதாகத் தான் அது இருக்கும்.

    ReplyDelete
  3. Now as per media source all the persons back in this struggle are christian NGO. Where they go at the time of starting the plant. Why they struggle against kalpakkam, tharapur. Now almost all work is over. We can oppose new projects. atomic energy is very dangerous. but there is now no alternate for it.

    ReplyDelete
  4. உங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்...
    but there is now no alternate for it.
    இது மனித இனத்தில் இருந்து எடுக்க வேண்டிய செயல். எந்த ஒரு எதிர்ப்பிலும் சில சதி வேலை செய்யும் கைகள் இருக்கலாம். அவர்களுக்கு நாம் குறிப்பிட்ட சாராரின் முத்திரையை குத்துவதை நிறுத்தி விட்டு, இந்த மின்சார உற்பத்தியில் மாற்று வழிக்கான முயற்சியில் நாம் உலக நாடுகளுக்கு முன்னோடியாக வர முயல வேண்டும். மாற்று வழி இல்லை என்று நாம் மட்டுமா சொல்கிறோம் உலகமே சாதிக்கிறது.அப்படியெனில் மாற்று வழி யாருக்கும் இது வரை புலப்படவில்லை.எல்லோருக்கும் முன் நாம் அதை கண்டுபிடித்தோம் என்றால் தொழில் நுட்பத்தில் உலக நாடுகளை மிஞ்சி விடலாம். ஆரோக்யமான இந்தியாவையும் உருவாக்கலாம்.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts